கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே திருடு போன கோயில் காளையை கேரள மாநில இறைச்சிக் கடையிலிருந்து போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக இளைஞரை கைது செய்தனர்.
போச்சம்பள்ளி வட்டம் அகரம் அருகே குடிமேனஹள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக காளையை வழங்குவது வழக்கம். இக்காளைகளை கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் கோயில் காளை ஒன்றை வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பான புகாரின் பேரில், பாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்ப ராஜ் (27) என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து கோயில் காளையை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, புஷ்ப ராஜை கைது செய்தனர். விசாரணையில், கேரள மாநிலத்தில் இறைச்சிக் கடையில் காளையை விற்பனை செய்தது தெரிந்தது.
தொடர்ந்து, கேரளா சென்ற போலீஸார், அங்குள்ள இறைச்சிக் கடையிலிருந்து கோயில் காளையை மீட்டு, கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை, தேடி வருகின்றனர்.