க்ரைம்

சென்னை | வாடிக்கையாளர்போல் நுழைந்து நகைக்கடையில் திருடிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வாடிக்கையாளர்போல் நுழைந்து பிரபல நகைக்கடையில் நகை திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகர், 2-வது அவென்யூ பகுதியில் பிரபலமான தனியார் நகைக்கடை இயங்கி வருகிறது. கடந்த 30-ம் தேதி இந்த நகைக்கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாடிக்கையாளர் ஒருவர் வந்தார்.

5 சவரன் மாயம்: அவர் தங்க நகை பிரிவில் ஒவ்வொரு நகையாக வாங்கி பார்த்துவிட்டு, நீண்ட நேரத்துக்கு பின்னர் எந்த நகையும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு சென்று விட்டார். அடுத்த சில நாட்களுக்கு பின்னர், நகைக்கடை ஊழியர்கள் நகைகளை சரிபார்த்தபோது ரூ.2.41 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தங்க நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது டிப்டாப் உடையணிந்து வாடிக்கையாளர்போல் வந்த கொள்ளையன்தான் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நகைக்கடையின் மேலாளர் சிவராமன் நகை திருட்டு குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது. நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டதாக அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த பாலாஜி (29) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT