தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் குமரியை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திய பெண் ஹெல்மெட் அணிந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. டிஎஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களது ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஸ். தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் கடந்த மாதம் 28-ம் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்தார்.
அங்கு தங்கி இருந்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர்களுக்கு அறிமுகமானார். அந்த பெண்ணும் கோயில் வளாகத்தில் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் கடந்த 5-ம் தேதி காலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். அவர்களுடன் அந்த பெண்ணும் வந்துள்ளார்.
அங்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி குழந்தையுடன் சென்ற அந்த பெண் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இது குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ரதி அளித்த புகாரின் பேரில், டி.எஸ்.பி. வசந்த் ராஜ், காவல் ஆய்வாளர் மகா லட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தையுடன் அந்த பெண் மோட்டார் சைக்கிளில் தலைக் கவசம் அணிந்த ஒரு நபருடன் தப்பிச் செல்வது சிசிடிவி கேமரா பதிவு மூலம் கண்டறியப்பட்டது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடி வரை அவர்கள் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. பிடிக்க டி.எஸ்.பி வசந்த ராஜ் தலைமையிலான இரண்டு தனிப்படையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.