தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பட்டப் பகலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ், கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ரதி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஹரிஸ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். உடல்நலம் சரியில்லாத முத்துராஜ் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க முடிவு செய்தார். இதற்காக மனைவி ரதி , ஒன்றரை வயது மகன் ஹரிஸ் ஆகியோருடன் கடந்த மாதம் 28-ம் தேதி அவர் குலசேகரன்பட்டிணம் வந்துள்ளார்.
அங்கு கோயில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் முத்துராஜ் குடும்பத்தினருடன் அறிமுகமாகியுள்ளார்.அவரும் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் ரதி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் துணிகளை சலவை செய்வதற்காக நேற்று முன்தினம் காலையில் திருச்செந்தூருக்கு புறப்பட்டார். அப்போது அந்த பெண் தானும் அங்கு வருவதாக கூறி அவர்களுடன் வந்துள்ளார். திருச்செந்தூர் வந்ததும் கோயில் கலையரங்கம் பகுதியில் டோல்கேட் அருகே உள்ள குளியல் அறைக்கு ரதி துணிகளை சலவை செய்ய சென்றுவிட்டார். முத்துராஜ் சோப்பு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது குழந்தைக்கு, ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி குழந்தையை அந்த பெண் தூக்கி சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் கோயில் வளாகத்தில் முத்துராஜும், ரதியும் தங்களது குழந்தையை தேடினர். ஆனால் குழந்தை கிடைக்காததால். ரதி திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அந்த பெண், குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது தெரியவந்தது. அதன் மூலம் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பட்டப் பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.