க்ரைம்

திருவண்ணாமலையில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: ரூ.6 கோடிக்கு விற்க முயன்ற 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36). ரியல் எஸ்டேட் தொழில்செய்து வருகிறார். இந்நிலையில், இவர் பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை ரூ.2 கோடிக்கு விலை பேசி வருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின்பேரில், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, தனிப்படை போலீஸார் மாறுவேடமிட்டு, பாலமுருகனிடம் சிலையை விலை பேசினர்.

அப்போது, ரூ.2 கோடி கொடுத்து மாணிக்கவாசகர் சிலையை வாங்கினால், சென்னையில் தனது நண்பர் பிரபாகரனிடம் உள்ள ஐம்பொன் விநாயகர் சிலையையும் வாங்கித் தருவதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இரு சிலைகளையும் வாங்கிக் கொள்வதாக போலீஸார் தெரிவித்ததால், பாலமுருகன் மாணிக்கவாசகர் சிலையுடன் சென்னைக்கு வந்தார். பின்னர், சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில், பிரபாகரனை மாறுவேடத்தில் இருந்த போலீஸாருக்கு பாலமுருகன் அறிமுகப்படுத்தினார்.

அப்போது, மாணிக்கவாசகர் சிலைக்கு ரூ.2 கோடி, விநாயகர் சிலைக்கு ரூ.4 கோடி என பேரம்பேசப்பட்டது. தொடர்ந்து, பாலமுருகன், அம்பத்தூர் பிரபாகரன் (40), அவருடன் வந்த விருதுநகர் மணிகண்டன் (34) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், இரு சிலைகளையும் மீட்டனர்.

18-ம் நூற்றாண்டு சிலைகள்: அந்த இரு சிலைகளும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள கோயிலில் திருடப்பட்டது என்றும், 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT