நாமக்கல்: எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தனியார் காஸ் ஏஜென்சி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). நேற்று காலை அவரது வீட்டுக்கு நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவன ஊழியர் அருண் குமார் (25) என்பவர் சிலிண்டரை மாற்றுவதற்கு வந்துள்ளார். அப்போது பார்த்தசாரதியின் பக்கத்து வீட்டுக்காரரான தன லட்சுமி (60) என்பவர் தனது வீட்டு எரிவாயு சிலிண்டரில் கசிவு உள்ளது. அதனை சரி செய்து தரும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து தனலட்சுமியின் வீட்டு சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவை சரி செய்யும் பணியில் அருண்குமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்துள்ளது. இதில், தனலட்சுமி, சிலிண்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட அருண்குமார் ஆகிய இருவரும் காயமடைந்தனர். மேலும், சிறிய சந்தில் இரு வீடுகளும் இருந்ததால் இரு வீடுகளிலும் புகை பரவியது.
இதில் பார்த்தசாரதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க மடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் காயமடைந்த தனலட்சுமி, அருண் குமார் மற்றும் மயக்கமடைந்த பார்த்தசாரதி ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். முகத்தில் காயமடைந்த அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்துக்கு காரணம்: தனலட்சுமி வீட்டு சிலிண்டரின் வாய் பகுதியில் இருக்கும் வாசரை கத்தரிக்கோலை நுழைத்து வேகமாக வெளியே எடுக்க அருண்குமார் முற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட உராய்வால் சிலிண்டரில் தீப்பிடித்துள்ளது. உடனடியாக ஈரத்துணியால் சிலிண்டரை மூடியிருந்தால் தீ விபத்தை தவிர்த்திருக்க முடியும் என மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்த தனலட்சுமி ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.என்.எல்.லில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக நாராயணன் பணியில் சேர்ந்துள்ளார். மேலும், தீ விபத்தின் போது பார்த்தசாரதியின் மனைவி லதா வீட்டில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.