படம் மு. லெட்சுமி அருண் 
க்ரைம்

நெல்லையில் இளம்பெண் கொலை: உறவினர்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளம்பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளத்தைச் சேர்ந்தவர் சந்தியா (18). திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் உள்ள அழகு நிலைய பொருள் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே கடையில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் விவகாரத்தில் தகராறு இருந்ததாக தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த இளைஞரை கடை உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இந்நிலையில், வழக்கம் போல் கடையில் சந்தியா நேற்று பணி செய்து வந்தார். பிற்பகலில் கடையிலிருந்து அருகிலுள்ள கிட்டங்கிக்கு பொருட்களை எடுக்க சென்றபோது, அங்கு வந்த அந்த இளைஞர் சந்தியாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சந்தியாவின் உறவினர்கள் சொக்கப்பனை முக்கு பகுதியில் நேற்று மாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அங்கு வந்து வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT