திருவள்ளூர்: அம்பத்தூரில் வீட்டு படுக்கை அறையில் குளிர்சாதன இயந்திரம் தீப்பற்றி எரிந்ததில் புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் இருவரும் நேற்று உயிரிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு, ஏகாம்பரம் நகர், காளிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஹகிலா (50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ரஹமத் காலமாகிவிட்டார். இவர்களது மகள் நஸ்ரின் (16) அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹகிலா, தனது மகள் நஸ்ரினுடன் படுக்கையறையில் ஏசி போட்டு தூங்கியுள்ளார்.
நேற்று அதிகாலை ஹகிலா வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பல முறை தட்டியும் கதவு திறக்கப் படாததால், பொதுமக்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, அங்கு புகை மூட்டமாக இருந்த நிலையில் ஹகிலா, நஸ்ரின் இருவரும் மூச்சுத் திணறி படுக்கையறையில் கிடந்தனர். மேலும், அங்கிருந்த குளிர்சாதன இயந்திரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக, பொது மக்கள் இருவரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஹகிலா, நஸ்ரின் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், அம்பத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டுப் படுக்கையறையில் இருந்த குளிர் சாதன இயந்திரம் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து, அதிலிருந்து வெளியேறிய கரும் புகையால் இருவரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரிக்கின்றனர்.