ராஜ்மோகன் குமார் | கோப்புப் படம் 
க்ரைம்

விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி: திருப்பூரில் முன்னாள் திமுக பிரமுகர் கைது

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவில் ஆதிக்கம் செலுத்திவந்த கே.ராஜ்மோகன் குமார் அண்மையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது விசா பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திமுகவினர் கூறும்போது, "திருப்பூரில் கட்சி பெயரை சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியவர் கே.ராஜ்மோகன் குமார். இவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே இவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் திரைப்படங்களில் முகம் காட்டியவர், மீண்டும் மெள்ள, மெள்ள கட்சிக்குள் நுழைந்து தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இடங்களில் குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை எடுத்தார். இதில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். கட்சித் தலைமை இதனால் கோபப்பட்டு அவரை நிரந்தரமாக நீக்கியது. ஏற்கேனவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் நிரந்தர நீக்கப்பட்டது கட்சிக்குள் பலரையும் நிம்மதிகொள்ள வைத்துள்ளது." என்றனர்.

இந்நிலையில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 25 ஆயிரம் பணம் பெற்று, அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ராஜ்மோகன் குமாரை திருப்பூர் வடக்கு போலீஸார் இன்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT