சென்னை: நகை, பணம் கொடுக்கவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கல்லூரி மாணவியை மிரட்டி வரும் இளைஞரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் தி.நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழி ஒருவர் மூலம் இன்ஸ்டாகிராமில் மாதவரத்தைச் சேர்ந்த சந்திப் சோலங்கி (23) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர், இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துள்ளனர். தங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாறி உள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் புகைப்படங்களை தவறாகசித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்.அப்படி செய்யாமல் இருக்க நகை, பணம் வேண்டும்என மாணவியை சந்தீப் சோலங்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. பயந்துபோன மாணவி 100 கிராம் நகையை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து நகை, பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர். இதையறிந்த சந்தீப் சோலங்கி தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.