க்ரைம்

ஆபாச படம் பார்ப்பவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுச்சேரி: ஆபாச படம் பார்ப்போரிடம் பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பார்ப்பவர்களிடம் நூதன முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கிறது. ஆபாச வீடியோ பார்க்கும்போது திரையில் திடீரென புரோசர் லாக்டு என்ற போலியான மத்திய சைபர் க்ரைம் பெயரில் அறிவிப்பு வெளிவருகிறது. இந்திய சட்டத்தால் தடை செய்யப்பட்டவற்றை பார்ப்பது, பரப்புவது போன்ற மற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து லாக் செய்யப்பட்ட கம்ப்யூட்டரை மீண்டும் அன்லாக் செய்ய அபராதமாக குறிப்பிட்ட தொகையை சில மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும் என கேட்கிறது. அபராத தொகையை செலுத்த தவறினால் குற்றசெயலில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு அமைச்சகத்துக்கு மாற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது. மேலும், ஆன்லைனில் அபராதம் கட்டுவதற்கு வழிமுறைகளும் தெரிவிக்கப்படுகிறது. அதன் வழியாக உள்ளே நுழைந்து பணம் கட்டினால் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் பறி போய்விடும்.

இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், “ஆபாச படங்களை பார்ப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், இதுபோன்ற அபராதங்களை அரசு விதிப்பதில்லை. அரசின் பெயரில் போலியாக இதுபோல் மக்களிடம் மோசடி செய்யப்படுகிறது. இந்த மோசடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முதலில் ஆபாச இணையதளங்களை பார்ப்பதை மக்கள் கைவிட வேண்டும். அதையும் மீறி இதுபோன்ற தகவல் வந்தால் டெலிட் அல்லது எண்ட் டாக்ஸ் தேர்வு செய்யலாம். அதுவும் சரிவரவில்லை எனில் முழுவதுமாக ஷெட் டவுன் செய்துவிட வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT