திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2020-ல், பாலசுப்பிரமணியம் சிறுமியை, ஆந்திர மாநிலம் நகரிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கனகம்மா சத்திரம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதிட்டார். முடிவுக்கு வந்த விசாரணையில், பாலசுப்பிரமணியம் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி நேற்று அளித்தார்.அதில், பாலசுப்பிரமணியத்துக்கு, சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை மிரட்டிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இத்தண்டனைகளை பாலசுப்பிரமணியம் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.