பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நூம்பல் பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டு ஒருவரை வழிமறித்து ரூ.5 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறித்தது தொடர்பான வழக்கில், தாம்பரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த டேவிட் பினு, மாரி என்ற சின்னமாரி, பீட்டர் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீஸார் கைது செய்தனர்.பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறைக்கு அவர்களை அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, டேவிட்பினு, மாரி என்கிற சின்னமாரி ஆகிய இருவர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோடினர். இதில் தப்பியோடிய சின்ன மாரியை போலீஸார் சுட்டதில் அவர் இறந்தார். டேவிட்பினு தப்பி சென்று விட்டார்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நிலுவையில் உள்ள 16 குற்றவழக்குகளில் டேவிட்பினுவுக்கு தொடர்பு இருந்ததும் சசி என்ற காவநாடுசசி என்ற பெயரில் இருந்ததும் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டாரகரா கிளை சிறையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கேரள போலீஸ் உதவியுடன் நேற்று முன்தினம் டேவிட் பினுவை 22 ஆண்டுக்கு பிறகு கைது செய்து, நேற்று பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.