சென்னை: சென்னை அண்ணா நகர் 4-வது பிரதான சாலை ‘வி’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சுஜரிதா (76). இவரது கணவர் ஏற்கெனவே காலமாகி விட்டார்.
மகன் முரளிதரன் அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வருகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசிக்கும் சுஜரிதாவுக்கு உதவியாக, சிவகாசியைச் சேர்ந்த பணிப்பெண் மகாலட்சுமி (45) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மூதாட்டி முதல் தளத்திலும், பணிப் பெண் தரை தளத்திலும் படுத்திருந்தனர்.
கதவின் தாழ்ப்பாள் சரிவரப் போடாததால் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மகாலட்சுமி, சுஜரிதா ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் சுஜரிதா அணிந்திருந்த 8 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.1.40 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.