க்ரைம்

கைதியின் மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்த சேலம் சிறை காவலர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

சேலம்: திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரின் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த சேலம் மத்திய சிறை காவலர் விஜயகாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முருகேஸ்வரி. இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்த சிவக்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாரை சந்திப்பதற்காக முருகேஸ்வரி சென்றபோது, சிறை காவலர் விஜயகாந்த் அறிமுகமாகி உள்ளார்.

இந்த அறிமுகத்தை வைத்து, முருகேஸ்வரியின் செல்போனுக்கு விஜயகாந்த் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியான பேச்சுகள் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக முருகேஸ்வரி, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், முருகேஸ்வரியைத் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாகப் பேசி தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறைக் காவலர் விஜயகாந்த்தை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT