க்ரைம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஃபைனான்சியர் காருடன் எரித்துக் கொலை: ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபைனான்சியர் விளாத்திக்குளம் அருகே காருடன் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக, கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாக்குளம் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, காரின் பின் பகுதியில் கருகிய நிலையில் ஓர் உடல் கிடந்தது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கிடந்த செல்போன் மற்றும் காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், அந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், செல்போன் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் (30) என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

குளத்தூர் போலீஸார் சாயல்குடி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டபோது, நாகஜோதியைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்ததின் பேரில், மைக்கேல் ராஜைப் பிடித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர். பின்னர் குளத்தூர் போலீஸார் மைக்கேல் ராஜை அழைத்துவந்து, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நாகஜோதி கொலை வழக்கில் மைக்கேல் ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சாயல்குடியைச் சேர்ந்த நாகஜோதி பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். அவரது கார் ஓட்டுநராக மைக்கேல் ராஜ் பணிபுரிந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மைக்கேல்ராஜுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்து நாகஜோதி உதவி உள்ளார்.

இந்நிலையில், நாகஜோதியிடம் பணப் புழக்கம் அதிகம் இருப்பதையறிந்த மைக்கேல்ராஜ், அவரை மிரட்டி, பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, நேற்று முன்தினம் காலை நாகஜோதியிடம், விளாத்திகுளத்தில் ஒருவர் ரூ.2 லட்சம் தருவதாகவும், அவரிடம் பணத்தை வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் மைக்கேல் ராஜ் கூறியுள்ளார். இதை நம்பிய நாகஜோதி, மைக்கேல்ராஜுடன் நேற்று முன்தினம் காலை காரில் புறப்பட்டுள்ளார். சாயல்குடியை கடந்து சென்றபோது, மைக்கேல் ராஜின் தம்பி கனி (26), உறவினர்கள் மாரி (28), கணபதி ராஜன் (28) ஆகியோர் காரில் ஏறியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகேயுள்ள குமரசக்கனாபுரம் பகுதியில் கார் வந்தபோது, அவர்கள் 4 பேரும் சேர்ந்து நாகஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடலை காரின் பின்பகுதியில் வைத்து, விளாத்திகுளம், பிள்ளையார் நத்தம், தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர், நாகஜோதியின் சடலத்தை காருடன் எரித்துவிட முடிவெடுத்துள்ளனர்.

இருவர் மட்டும் கன்னிராஜபுரம் சென்று சரக்கு ஆட்டோவில் பெட்ரோல், விறகு வாங்கி வந்துள்ளனர். பல்லாக்குளம் சாலையில் காட்டுப் பகுதியில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி, விறகுகளைப் போட்டு எரித்துள்ளனர். அப்போது காரிலிருந்த தீயணைப்பு அலாரம் ஒலித்துள்ளது. இதனால் பதற்றமடைந்த 4 பேரும் அங்கிருந்து சரக்கு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர்.

அப்போது மைக்கேல் ராஜின் செல்போன் கீழே விழுந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அந்த செல்போனைக் கொண்டு விசாரணை நடத்தியதில், நாகஜோதி கொலை செய்யப்பட்டது. தெரியவந்தது நால்வரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT