க்ரைம்

பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டு: கிருஷ்ணகிரியை சேர்ந்த கொள்ளையன் சென்னையில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிவிட்டு, அவர்கள் புகார் அளிக்காமல் இருக்க பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த பிரபல கொள்ளையன், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கடந்த மாதம் 5-ம் தேதி இளம் பெண் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் அப்பெண்ணை தாக்கி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீஸார் விசாரித்தபோது, இதேபோல பல சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஊத்தங்கரை டிஎஸ்பி ஜி.பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (36) என்பதும், பல்வேறு இடங்களுக்கு சென்றுகொண்டே இருப்பதும் தெரியவந்தது.

கடைசியாக சென்னை புழல் சிறையில் இருந்தது வெளியே சென்றதும், அவருக்கு இரு நண்பர்கள் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது நண்பர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போலீஸார், அவர்கள் மூலம் முருகனை கைது செய்தனர்.

இவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மட்டுமின்றி, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிவிட்டு, அவர்கள் வெளியே சொல்லாமல் இருக்க பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர் மீது கிருஷ்ணகிரி, தருமபுரி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முருகனைக் கைது செய்த டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீஸாரை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதுகுறித்து டிஜிபி கூறும்போது, “இதுபோன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காவிட்டால், அது குற்றம் செய்வோருக்கு மேலும் துணிச்சலை ஏற்படுத்திவிடும். எனவே, பொதுமக்கள் தைரியமாக முன்வந்து, காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT