க்ரைம்

விருதுநகர் அருகே அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் சாணத்தை கொட்டிய மர்ம நபர் யார்? - போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சாணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சின்ன மூப்பன் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 222 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 123 பேருக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவும், 150 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தையொட்டி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (செப்.5) சாணத்தை கொட்டியுள்ளனர். காலையில் சமையல் கூடத்துக்குச் சென்ற பணியாளர்கள் தண்ணீர் பிடித்த போது சாணம் கலந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் ஏற்றி பின்னர் பயன்படுத்தினர். இதே போன்று நேற்று காலையிலும் பள்ளி வளாகத்தில் உள்ள அதே குடிநீர் தொட்டியில் சாணம் கொட்டப்பட்டிருந்தது. தொடர் சம்பவத்தால் பள்ளிக்கு சமையல் வேலைக்கு வந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

இச்சம்பம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாணம் கொட்டப்பட்ட குடிநீர் தொட்டி அவ்விடத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது. அதோடு சமையல் கூடத்தின் உள் பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது.

இந்தத் தண்ணீர் தொட்டியைச் சுற்றி இரும்பால் ஆன `கிரில் கேட்' அமைக்கப்பட உள்ளதாகவும் சாணத்தைக் கொட்டிய நபர்கள் யார் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT