சாத்தூர்: சாத்தூர் அருகே கஞ்சா பழக்கத்தால் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வருகிறார். ஆக. 24-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவர், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதைப் பார்த்த சக மாண வர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை முடிந்த நிலையில் சிறுவன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டார். அப்போது சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த போது, சாத்தூர் அருகிலுள்ள நடுச்சூரங்குடியைச் சேர்ந்த வேல் முருகன், கோடீஸ்வரன் ஆகியோர் சிறுவனுக்கு கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தி பள்ளிக்குச் செல்லக் கூடாது என மிரட்டியது தெரியவந்தது.
மேலும், வீட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து வர வேண்டும், இல்லையெனில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கூறிவிடுவோம் என அந்த 2 பேரும் மிரட்டியதாக பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்துள்ளார். இது குறித்து, சிறுவனின் தந்தை சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வேல் முருகன், கோடீஸ்வரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.