வண்டலூர்: பள்ளி மாணவியை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு நகை மற்றும் பணம் பறித்த பொறியாளரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
செங்கை மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தபள்ளி மாணவி (16) தனது பெற்றோரின் செல்போனைப் பயன்படுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த, பொறியாளர் வேல்முருகன் (22)என்பவருடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு கேம் விளையாடி வந்துள்ளார்.
இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். பணம் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து கூரியர் மூலம் வேல்முருகனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். மகளிடம் விசாரித்தபோது அவர், காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்களை வேல்முருகனுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சென்று மாணவியை ஏமாற்றி நகை, பணம், பறித்த வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.