கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கத்தியால் தாக்கியதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பிளஸ் 2 மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடி மண் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 16 மற்றும் 17 வயதுடைய 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற ஓட்டப்பிடாரம் போலீஸார் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று வகுப்பில் ஆசிரியர் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் பார்த்து எழுதியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பசுவந்தனை பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளி மைதான பகுதியில் இருந்த போது, ஆசிரியரிடம் கூறியது தொடர்பாக மாணவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர் கத்தியால் பசுவந்தனை பகுதியை சேர்ந்த 2 மாணவர்களை தாக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவரை கைது செய்தார்.