க்ரைம்

செங்குன்றம் அருகே உடற்பயிற்சி கூடத்தில் 2 பேர் கொலை

செய்திப்பிரிவு

செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவு பெருங்காவூரைச் சேர்ந்த விஜய்(26), ஸ்ரீநாத்(20) அஜய்குமார் (27) ஆகியோர் தங்கியிருந்தனர்.

அப்போது, நள்ளிரவில் அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல், 3 பேரையும் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த 3 பேரில், விஜய், ஸ்ரீநாத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் அஜய்குமாரை மீட்டு, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் செங்குன்றம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, உயிரிழந்த விஜய், ஸ்ரீநாத் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, செங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடத்திய முதல் கட்ட விசாரணையில், கண்ணம்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், விஜய், ஸ்ரீநாத் ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே கோயில் திருவிழா ஒன்றில் வீண் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு காரணமாகவே இந்த இரட்டை கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மீஞ்சூர் அருகே வெள்ளி வாயலைச் சேர்ந்த டெல்லி (37), கண்ணம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், நரேஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT