சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மதுரவாயலை சேர்ந்த குறும்பட இயக்குநர் சத்தியபிரகாஷ் (37). இவர் பள்ளி மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலமாக பழகி வந்துள்ளார். பின்னர் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டியும், நடிப்பு பயிற்சி அளிப்பதாக கூறியும், வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின்கீழ் சத்தியபிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சத்தியபிரகாஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.55 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, உடல்மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு தமிழக அரசும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.