சென்னை: நூதன முறையில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் வெங்கடசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்புள்ள நிலம் இருந்தது. ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் இந்த சொத்தை மோசடி கும்பல் அபகரித்தது. இதுகுறித்து நில உரிமையாளரின் வாரிசு மல்லிகா என்பவர் பதிவுத் துறை தலைவரிடம் 26.10.2019 அன்று புகார் அளித்தார்.
இதையடுத்து மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் போலியான ஆவணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இத்த உத்தரவு வில்லிவாக்கம் சார்-பதிவாளர் அலுவலக வில்லங்கச் சான்றில் அட்டவணை குறிப்பில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் சிலர் சார்-பதிவாளர் அலுவலக வில்லங்க குறிப்பை நீக்கி மீண்டும் போலியான ஆவணம் மூலம் வெங்கடசாமி நாயுடுவின் சொத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நில உரிமையாளர் தரப்பினர் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆணையர் அனந்தராமன், ஆய்வாளர் மேரி ராணி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக புழல் பாலாஜி நகர் லோகநாதன் (60), அண்ணாநகர் கிழக்கு ஏ.கே.கிருஷ்ணன் (61), புழல் கங்காதரன் தெரு வெங்கடேசன் (45) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மோசடிக்கு உடந்தையாக இருந்த பதிவுத் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சரவணன், வேலு ஆகிய இருவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.