க்ரைம்

எஸ்ஐ தேர்வு முறைகேடு வழக்கு: காவல் துறையினரின் பாதுகாப்பை மீறி கைபேசி கொண்டு வந்தது எப்படி?

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வேட்டவலத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண், கைபேசியை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார்.

கர்ப்பிணி எனக்கூறி, தேர்வு அறையில் இருந்து கழிப்பறைக்கு சென்றவர் 25 நிமிடங்களாக வராததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை சோதனையிட்டதில், வினாத்தாள் மற்றும் விடைத்தாளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கழிப்பறையில் கைபேசி இருந்துள்ளது.

வினாத்தாளை கைபேசியில் படம் பிடித்து, செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் மருத்துவர் பிரவீன்குமாருக்கு அனுப்பி உள்ளார். பின்னர், பிரவீன்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உதவியுடன் விடைகளை பெற்று விடைத் தாளில் முழுமையாக எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில், சென்னையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய லாவண்யாவின் கணவரான சுமன் தலைமையில் ‘மாஸ்டர் பிளான்’ போடப்பட்டு திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து வெறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாவண்யா, உதவி ஆய்வாளர்கள் சுமன் (கணவர்) , சிவக்குமார் மற்றும் மருத்துவர் பிரவீன் குமார் ஆகியோர் ஆகஸ்ட் 29-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், கைபேசி பயன்படுத்தியவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல கட்ட சோதனைகளை கடந்து, தேர்வு மையம் உள்ளே கைபேசியை கொண்டு சென்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் காவல் துறையில் உள்ள உள்ளூர் கருப்பு ஆடுகள் உதவி செய்துள்ளது, தனிப்படை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியானது. இவர்களை காப்பாற்றும் முயற்சியும் திரைமறைவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறையினர் கூறும்போது, “தேர்வு மையம் மற்றும் தேர்வு அறை உள்ளே கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பல்வேறு கட்ட சோதனைகளை கடந்து கைபேசி சென்றது எப்படி? கழிப்பறைக்கு கைபேசியை கொண்டு சென்றது லாவண்யாவா? அல்லது மற்றவர் (உள்ளூர் காவலர்கள்) உதவியுடன் கொண்டு செல்லப்பட்டதா?

அல்லது லாவண்யாவை சோதனை செய்ய வேண்டாம் என பணியில் இருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, அதன்மூலம் கைபேசி கொண்டு செல்லப்பட்டதா?, அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. தேர்வு அறை, கழிப்பறைக்கு செல்லும் வழித்தடம், முதல் நாளே லாவண்யாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், மிகப் பெரிய சதித்திட்டம் நடைபெற்றுள்ளது. சதி வலையில் உள்ள அனைவரையும் நீதியின் முன்பு நிறுத்தி தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் காவலர் தேர்வு மீது இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT