கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ தலை முடியை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை மேற்கு மாட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (49). தலை முடியை வாங்கி அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆக்ஸ்ட் 26-ம் தேதி இரவு, வீட்டை பூட்டி விட்டு ஒரப்பம் அம்மன் கோயில் விழாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதனிடையே, இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், வீட்டில் வைத்திருந்த 42 கிலோ தலைமுடி அடங்கிய மூட்டைகளை திருடிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில். வீட்டுக்கு வந்த வெங்கடேசன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது உள்ளே வைத்திருந்த 42 கிலோ தலைமுடி மாயமானது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ பிரபாகரன் விசாரணை நடத்தினார். மேலும், வெங்கடேசன் வீட்டில் இருந்த சிசிடிவி. கேமராவை பார்த்தபோது. அதில் முடியை திருடி சென்றது காவேரிப் பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி எம்.எஸ். நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (27) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.