கோவை: வியாபாரிகளிடம் நூல் பண்டல் களை வாங்கி ரூ.81.16 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு வியாபாரிகளிடம் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
கோவை கணபதி கே.ஆர்.ஜி லே அவுட்டைச் சேர்ந்தவர் நேசமணி. நூல் வியாபாரி. இவர், ராமநாதபுரம் போலீஸாரிடம் அளித்த புகாரில், ‘‘என்னிடம் ரூ.33.16 லட்சத்துக்கு நூல் பண்டல்களை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தை தராமல் பெருமா நல்லூரைச் சேர்ந்த ஆனந்த் (43), திருப்பூர் போயம்பாளையத்தைச் சேர்ந்த பாரத் (39), செளரிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த மோசஸ் மேத்யூ (31), அவிநாசி யைச் சேர்ந்த மருதாசலம் (49) ஆகியோர் ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறியிருந்தார்.
அதன் பேரில், ராமநாதபுரம் போலீஸார் மோசடி, கூட்டுச் சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நால்வரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதேபோல, திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத் தைச் சேர்ந்த கண்ணன், பீளமேடு போலீஸாரிடம் அளித்த புகாரில், ‘‘கோவை வெள்ள லூரைச் சேர்ந்த புருஷோத்தமன் (58), அவரது மகள் கீதாஞ்சலி (24), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த காஜா உசேன் (45), போத்தனூர் இந்திரா காலனியைச் சேர்ந்த ஓட்டுநர் வீரமுத்து (57) ஆகியோர் ரூ.48 லட்சத்துக்கு நூல் பண்டல்களை வாங்கி பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர்’’ எனக் கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீஸார், 5 பிரிவுகளின் கீழ் நால்வர் மீதும் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். மாநகர போலீஸார் கூறும்போது, ‘‘இரு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 8 பேரிடம் இருந்து 3 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள். இக்கும்பலின் தலைவராக புருஷோத்தமன் இருந்துள்ளார். இவர்கள் ஒரு செயலியின் மூலம் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளை பற்றி தெரிந்துகொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பேசுவர். தாங்களும் ஒரு வியாபாரி போல காட்டிக்கொள்வர். முதலில் சிறுதொகைக்கு பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை கொடுத்துவிடுவர்.
அதன் மூலம் அவர்களுக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்துவர். பின்னர், பல டன் கணக்கில் பொருட்களை வாங்குவர். ஓரிரு நாட்கள் கழித்து அதில் 30 சதவீத தொகையை தருவர். மீத தொகையை பின்னர் தருவதாக கூறி, மீண்டும் பொருட்களை வாங்குவர். இவ்வாறு ஒவ்வொரு வியாபாரியிடமும் பலமுறை பொருட்களை பெற்று பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர். இவ்வாறு வாங்கும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்றுவிடுவர். கடந்த 15 வருடங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓரிரு முறை கைதாகியுள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. நூல் பண்டல்கள் மட்டுமின்றி, மிளகு, மஞ்சள், உளுந்தம்பருப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களையும் டன் கணக்கில் வாங்கி மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள் ளது’’ என்றனர்.