க்ரைம்

கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு: காவல் துறையினர் ரோந்து, வாகன தணிக்கை தீவிரம்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகரில், கடந்த சில நாட்களில் மட்டும் ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் பெண்கள், மூதாட்டிகளிடம் இருந்து தொடர்ச்சியாக நகை பறிக்கும் சம்பவங்கள் நடந்தன. நகை பறிப்பில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகரில் காவல்துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அதிகாலை முதல் காலை வரை முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இந்த வாகனத் தணிக்கை நடந்து வருகிறது. இதற்கிடையே, நகை பறிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள், மூதாட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

காவல்துறை ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வாட்ஸ் அப் மூலம் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு சங்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த அறிவிப்பில், ‘‘கோவை மாநகரில் சில நாட்களாக நகை பறிப்பு சம்பவங்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணிக்குள் நடக்கின்றன.

தனியாக நடந்து செல்லும் பெண்கள், கோலம் போடும் பெண்கள், கோயிலுக்கு சென்று விட்டு தனியாக வரும் பெண்கள், மூதாட்டிகள் உள்ளிட்டோரிடம் நகை பறிக்கின்றனர். இவர்களால் பிடிக்க முடியாது என்பதால், இவர்களை குறிவைக்கின்றனர். இதனால் காவல்துறையினரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, காலை நேரங்களில் கோயிலுக்கு செல்பவர்கள் துணையோடு செல்லுங்கள் அல்லது எச்சரிக்கையாக செல்லுங்கள். தங்களது பாதுகாப்பை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விடுதிகள் சோதனை, வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT