சென்னை: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக பட்டதாரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). சென்னை மாநகர அரசுபேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்நேற்று முன்தினம் திருவொற்றியூரிலிருந்து திருவான்மியூர் (தடம் எண்.1) நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். மாலை 4மணியளவில் ராயபுரம் எம்.எஸ்.கோயில் தெரு மற்றும்புனித அன்னீஸ் பள்ளி சந்திப்பு அருகே செல்லும்போது, பேருந்துக்கு முன்னால் இளைஞர் ஒருவர் போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர் பேருந்துக்கு தொடர்ந்து வழி விடாமல் சென்றுள்ளார். இதனால், ஆத்திரம்அடைந்த பேருந்து ஓட்டுநர் இளைஞரைத் திட்டியவாறு முந்திச் சென்றுள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்தஇளைஞர் அரசுப் பேருந்தை முந்திச் சென்று வழிமறித்து நந்தகுமாரிடம் தகராறு செய்ததோடு, ஹெல்மெட்டால் தாக்கிஉள்ளார்.
உடனே பேருந்திலிருந்த பயணிகள், சம்பந்தப்பட்ட இளைஞரைப் பிடித்து வைத்துக் கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராயபுரம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், கைது செய்யப்பட்டது கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் (21) என்பது தெரியவந்தது. திருப்பூரைச் சேர்ந்த அவர், பி.காம்.படித்துவிட்டு தனது உறவினர் வீட்டில் தங்கி அரசுத்தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.