க்ரைம்

அருப்புக்கோட்டையில் சாலையோரம் நின்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

இ.மணிகண்டன்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் சாலை ஓரத்தில் நின்றுருந்த அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக் கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக திருச்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. பேருந்தை தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்தார்.பாளையம்பட்டி அருகே வந்தபோது பேருந்தில் திடீரென டீசல் குறைந்து ஏர் லாக் ஆனதால் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது.

அப்போது, சென்னை குன்றத்தூரிலிருந்து தனியார் விளம்பர நிறுவனத்திற்குச் சொந்தமான இரும்புக் கம்பிகள் ஏற்றிய லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்தது. அருப்புக்கோட்டை அருகே வரும் போது சாலையோரத்தில் நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இவ்விபத்தில், லாரியின் கிளீனரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜாகருல் இஸ்லாம் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சின்னத்தம்பி (49) மற்றும் பேருந்தில் பயணித்த ஆனந்த், பிரகாஷ், தனுசு, ராஜேஷ், ராஜா, அந்தோணி உள்ளிட்ட 15 பேர் பலத்த காயடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 15 பேரும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆனாலும் பலத்த காயமடைந்திருந்த சிவகங்கை ராஜேந்திரபிரசாத் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 14 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT