ஆதிலிங்கம் 
க்ரைம்

போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் - முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தது என்ஐஏ

செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் விவகாரத்தில் சென்னையில் முன்னாள் ராணுவ வீரரை என்ஐஏ கைது செய்துள்ளது.

கேரளாவில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றை ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படையினர் கடந்த 2021-ல் கைப்பற்றினர். இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) இந்த வழக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்நிலையில், என்ஐஏ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா -இலங்கை இடையே போதைப் பொருள், ஆயுதக் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் (43) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலி ஆதரவாளர்களை இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க வைக்க, போலி ஆவணங்கள், அடையாள அட்டைகளை இவர் தயாரித்து வழங்கியுள்ளார். இந்த கும்பலுக்கு போதைப் பொருளை விற்ற ஹாஜி சலீம் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரரான ஆதிலிங்கம், திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT