கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, நிலத்தை எழுதி வாங்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கந்து வட்டிக்காரர்களின் அலுவலகத்தை சோதனையிட்டு 400 ஏடிஎம் கார்டுகள், 90 காசோலைகள் மற்றும்பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ள விவரம் வருமாறு: கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டம் கந்தகுமாரன் அருகே உத்தம சோழகன் கிராமத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர் தனது குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் முத்தையா நகரைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவரிடம் தனது நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
இதில், ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, ரூ.50 ஆயிரம் பத்திர செலவுஎன்று பணத்தை கொடுத்த சத்திய மூர்த்தி கணக்கு காட்டியுள்ளார். பின்னர் 2021-ம் ஆண்டு வாங்கிய கடனில் இரண்டு தவணையாக ரூ. 1 லட்சத்தை குணசேகர் திரும்ப கட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு அடமானம் வைத்த பத்திரத்தை கேட்ட போது, வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சத்து 48 ஆயிரத்தை கட்டினால் பத்திரத்தை தருவதாகவும், இல்லை என்றால் நிலத்தை தங்கள் பெயரில் கிரையும் செய்து கொள்வதாகவும் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது பற்றி குணசேகர் கேட்ட போது, மிரட்டும் வகையில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மருமகன் அருண் ஆகியோர் பேசியுள்ளனர்.
இதுபோலவே கடந்த 2021-ம் ஆண்டு சிதம்பரம் பச்சையப்பா பள்ளி தெருவில் உள்ள ஸ்ரீவாரி என்ற பைனான்ஸில் குடும்ப செலவுக்காக குணசேகர் ரூ. 30 ஆயிரம் வாங்கியுள்ளார். இதற்கு அவர்களிடம் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து நிதி நிறுவன உரிமையாளர் ரகு, ரகுவின் நண்பர் ஆனந்த் ஆகியோர் வந்து, குணசேகரை ஹெல்மெட்டால் அடித்து வலுக்கட்டாயமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு அவரது நிலத்தை கிரைய பத்திரம் எழுதி வாங்கி மிரட்டியுள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நேற்று முன்தினம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் குணசேகர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சத்தியமூர்த்தி அருண், ரகு, ஆனந்த் ஆகியோர் மீது நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார் வையில் காவல் ஆய்வாளர்கள் ஆறுமுகம், சரஸ்வதி, கல்பனா ஆகியோர் தலைமையில்
மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள சத்திய மூர்த்தி பைனான்ஸ், பச்சையப்பா பள்ளிதெருவில் உள்ள ஸ்ரீவாரி பைனான்ஸ், முத்தையா நகரில் உள்ள சத்தியமூர்த்தி வீடு ஆகியஇடங்களில் வருவாய்த் துறையினருடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் எழுதப்படாத பாண்டு பத்திரத்தில் கையொப்பம் பெறப்பட்ட ஆவணங்கள் 180, நிரப்பப்படாத வங்கி காசோலையில் கையொப்பம் மட்டும் இடப்பட்ட காசோலைகள் 90, அடமானம் வைக்கப்பட்ட ஏடிஎம்கார்டுகள் சுமார் 400, அடமானம் வைக்கப்பட்ட கல்வி சான்றிதழ்கள், நில பத்திரங்கள், வாகனத்தின் உரிமை பத்திரங்கள் ஆகியவை சிக்கின. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், சிதம்பரம் முத்தையா நகரில் உள்ள சத்திய மூர்த்தி வீட்டில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் கந்து வட்டி வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து சத்திய மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.