க்ரைம்

பூந்தமல்லி | வழிப்பறி புகாரை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை போதையில் விரட்டிய 5 பேர் கைது: காணொலி வைரல்

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வழிப்பறி புகார் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸாரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் விரட்டிய காணொலி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையில் கத்தி முனையில் வழிப்பறி நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற பூந்தமல்லி போலீஸ்காரர் சரவணனை கஞ்சா போதையில் இருந்த 5 பேரும் கையில் கத்தியுடன் விரட்டியுள்ளனர். இதனால் அந்த போலீஸ்காரர் அங்கிருந்து பின்னோக்கி ஓடும் காணொலி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா, பிரதீப், ராஜா மற்றும் 2 சிறுவர்கள் என 5 பேரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் 5 பேரும் அன்றைய தினம் மாங்காடு, பெரியகொளுத்துவான்சேரி, கோவூர் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் குத்தியும் மொபைல் போன், பணம் ஆகியவற்றை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 5 பேரும் மாங்காடு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேர் சிறையிலும், 2 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் வழிப்பறிசம்பவங்கள் அதிகம் நடப்பதாலும் போலீஸார் ரோந்து பணியை தீவிரபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT