பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

தருமபுரி - பாலக்கோடு அருகே ரயில் பாதையை கடக்க முயன்றபோது ரயில் மோதி பணியாளர் உயிரிழப்பு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில் பாதையை கடக்க முயன்றபோது ரயில் மோதி ரயில்வே பணியாளர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெல்லூரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (45). ரயில்வே துறையில் கேட் மேனான இவர், பாலக்கோடு மாரண்டஅள்ளிக்கு இடையே பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு, பணி முடித்து வழக்கம்போல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாரண்டஅள்ளி அருகே செங்கோடபட்டி என்ற இடத்தில் ரயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தருமபுரி ரயில்வே போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்ட ஜெகதீசன் இடையில் மது அருந்திவிட்டு ரயில் பாதையை ஒட்டி நடந்து சென்றதும், செங்கோடபட்டி பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ரயில் பாதையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற நாகர்கோயில் விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

அவரது சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ரயில்வே போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT