க்ரைம்

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட வெள்ளவேடு, அம்பத்தூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், நிலுவையில் உள்ள கொலை, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய, சரித்திர பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், நேற்று அதிகாலை ரவுடிகள் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 60 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில், நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடைய 28 பேரும், கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 11 பேரும், கஞ்சா விற்பனை வழக்கில் தொடர்புடைய ஒருவர், ஒரு பிடியாணை குற்றவாளி, முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 19 பேரும் அடங்குவர். ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில் ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT