க்ரைம்

ஆவடி | பொறியாளர் கொலை: 4 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: சென்னை, அம்பத்தூர் அருகே கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (24). தனியார் நிறுவன பொறியாளரான இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்கள் இருவருடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை- மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள துரித உணவகத்துக்கு உணவு அருந்த சென்றார். அப்போது அங்கு மது போதையில் உணவு அருந்த வந்த 4 பேருக்கும், பாலச்சந்திரன் தரப்பினருக்கும் இடையே வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டது.

அப்போது, 4 பேரும், பாலச்சந்திரனையும் அவரது நண்பர் முகேஷையும் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த பாலச்சந்திரன், முகேஷ் இருவரும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே பாலச்சந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது. முகேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டைபோலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவ்விசாரணையின் அடிப்படையில், பாலச்சந்திரன் கொலை தொடர்பாக அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்த நெப்போலியன் (28), பெரம்பூர், பண்டர் கார்டனை சேர்ந்த அஜித் என்ற குணாநிதி (24), சென்னை- ஐ.சி.எப், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (27), முகப்பேர் கிழக்கு, 5-வது பிளாக்கைச் சேர்ந்த சங்கர்பாய் (27) ஆகிய 4 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். கைதான 4 பேரும் ரவுடிகள் என்பதும், அவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT