சென்னை: வேளச்சேரி தனியார் கல்லூரியில்மாணவர்களிடையே நேரிட்டதகராறில், கல்லூரி வளாகத்துக்குள் நேற்று பட்டாசுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி தரப்பில்பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், மாணவர்களுக்குள் மோதல் தொடர்ந்துள்ளது.
இந்தக் கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தாவரவியல் பயிலும் மாணவர்கள் சிலர்பாட்டு பாடியதை தனுஷ் கிண்டல்செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுஷைத் தாக்கியுள்ளனர்.
வார விடுமுறை முடிந்து நேற்று கல்லூரி திரும்பிய தனுஷ், தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி பட்டாசுகளை வீசியுள்ளார். எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீசியதாகக் கருதி, சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேறினர்.
தகவலறிந்து வந்த கிண்டி போலீஸார், மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "கல்லூரியில் ஏற்கெனவே நடந்த பிரச்சினை காரணமாக மாணவர் ஒருவர் பட்டாசு வீசியுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக 4 மாணவர்களைப் பிடித்து, விசாரித்து வருகிறோம்" என்றனர்.