சென்னை: ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு நரசிம்மா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ் (49). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் பட்டினப்பாக்கத்தில் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 7 பேர், ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது நண்பரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார். அவரது நண்பர் மாதவன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரை கொலை செய்த திருவள்ளூரை சேர்ந்த சந்துரு (29), எம்ஜிஆர் நகர் மணிவண்ணன் (26), அரக்கோணம் ஜெயபால் (63) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.