சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டிவிஎஸ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி கோமதி (70). நேற்று முன்தினம் கோமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட நபர் ஒருவர், தண்ணீர் கேன் போடுவதாகக் கூறி கோமதி வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர், கோமதியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த ஜெ.ஜெ.நகர் போலீஸார், அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தப்பியோடிய நபர், பாடியில் உள்ள மதுபான கடையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில், அவர், ஓட்டேரியை சேர்ந்த பிரகாஷ் (39) என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், 5 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.