கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கே.லட்சுமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவர், கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் பயிலும் இரு மாணவர்களிடையே நேற்று முன்தினம் கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதைக் கண்ட 16 வயது மாணவர் இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் தங்களது ஊரில் உள்ள காளியம்மன் கோயில் அருகே அவர் அமர்ந்து இருந்தபோது, இரு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், "இரு மாணவர்கள் சண்டையிட்டதை தடுக்க நீ யார்?" என்று கேட்டு அவரை அவதூறாகப் பேசியதுடன், மாணவரைத் தாக்கியுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் சப்தம் போடவே, அக்கும்பல் தப்பிவிட்டது. காயமடைந்த பள்ளி மாணவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, பள்ளி மாணவரைத் தாக்கியதாக இரு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்து, கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இரு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.