தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர், நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் 5 பேர் நேற்று சரணடைந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி பாம்பாளம்மன் கோயில் அருகே வசித்து வந்தவர் கோவிந்தராஜ் மகன் பிரபு (38). திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், அதிமுகவின் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை நகரச் செயலாளராக இருந்தார். சமூக ஆர்வலரான இவர், பிளக்ஸ் அச்சடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு, இரவு பழமார்நேரி சாலையில் தனது சகோதரர் வீட்டின் அருகேயுள்ள கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், பிரபுவை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா(26), மணிகண்டன் (33),ரமேஷ்(42), நாகராஜ்(30), சின்னையன் (24) ஆகிய 5 பேர் மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
இதில், பிரபுவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும், பிரபுவுக்கும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததால், இந்த விவகாரம் தொடர்பாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கொலை காரணமாக திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.