புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கவிதா(40). இவரின் மூத்த சகோதரியின் கணவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசேகர்.
புதுக்கோட்டையில் ஜவுளிக்கடை வைப்பதற்காக கவிதாவுக்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பித்தராதது குறித்து மே 9-ம் தேதி கருக்காக் குறிச்சி தெற்கு தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு, பாலசேகர் தனது நண்பர்களுடன் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் கவிதா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பாலசேகர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டுள்ளார்.
இதில், யாருக்கும் பாதிப்பில்லை. எனினும், இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாலசேகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாலசேகருக்கு கள்ளத்தனமாக கைத் துப்பாக்கியை கொடுத்த உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பி.நித்திஷ் குமார் (34) என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் அவரை கைது செய்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.