க்ரைம்

மலுமிச்சம்பட்டி ஊராட்சி பெண் உறுப்பினர் குடும்பத்தினரை வெட்டியதாக 5 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவை: மலுமிச்சம்பட்டி ஊராட்சிமன்ற பெண் உறுப்பினரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் சித்ரா (44). திமுகவை சேர்ந்த இவர், சில நாட்களுக்கு முன் அவ்வை நகரிலுள்ள வீட்டில் இருந்த போது முகமூடி அணிந்தபடி, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 5 பேர், சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜா (23), பிச்சையாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப் பாண்டி (24), மகேஷ் கண்ணன் (22), ஸ்ரீரக்சித் (18) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததை கண்டறிந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சித்ரா, காவல் துறையில் புகார் அளிப்பதாக கூறியதால் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான ஐந்து பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT