மேட்டூர் ஸ்கொயர் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோர் கடை 
க்ரைம்

மேட்டூர் | பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்த மூவர் கைது

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூரில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோரி ரகசிய அறை அமைத்து 200 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமைதீன் (50). இவருக்கு பேன்சி ஸ்டோர் உட்பட 3 கடைகள் சொந்தமாக உள்ளது. இந்த கடையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த உபாஸ் அலி (24) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று (ஞாயிறு) காலை ராஜ கணபதி நகர் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவரது கடையில் கோழியை வாங்க சென்றுள்ளார். அப்பொழுது கோழியை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையாக ரூ.600 அண்ணாதுரையிடம் கொடுத்துள்ளார்.

அதனைப் பார்த்த அண்ணாதுரை நோட்டு சற்று வித்தியாசமாக இருப்பதால் கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து உபாஸ் அலியிடம் கேட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது அண்ணாதுரை மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உபாஸ் அலியை பிடித்து மேட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மேட்டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி உபாஸ் அலியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்த பிறகு, வேலை பார்த்து வரும் தனியார் பேன்சி ஸ்டோரில் சோதனை மேற்கொண்டனர். அந்த பேன்சி ஸ்டோர் கடையில் சோதனை செய்யும் போது கடையின் உள்பகுதியில் ரகசிய தனி அறை அமைத்து செயல்பட்டது தெரியவந்தது. சோதனையில் கடையில் இருந்த பிரிண்டர், செல்போன் மற்றும் மூன்று 200 ரூபாய் கலர் பிரிண்ட் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் தொடர் விசாரணையில், கடையின் உரிமையாளர் காஜா மைதீனுக்கு ரூ.20 லட்சம் கடன் இருப்பதால், அவரது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஹீம் கடனை அடைப்பதற்காகவும், வேலைக்காகவும் அழைத்து வந்தார். அதன் பிறகு பேன்சி ஸ்டோர் கடையில் தனி அறை அமைத்து தயாரித்த கள்ள நோட்டை, வேறு கடைக்கு சென்று மாற்றி வர அறிவுறுத்தினார். அதன் பேரில் தான் கறிக்கடைக்குச் சென்று பணத்தை மாற்றும்போது சிக்கிக் கொண்டேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் காஜா மைதீன். அவரது உறவினரான அப்துல் அஹீம் மற்றும் கடை ஊழியர் உபாஸ் அலி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT