க்ரைம்

கோவையில் குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த 13 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் இரும்பு குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வெள்ளலூர் சாலையைச் சேர்ந்தவர் முத்தையா (51). இவர், அதே பகுதியில் சொந்தமாக இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையி்ல், முத்தையா இரும்பு குடோன் வைத்துள்ள இடத்தை அதன் உரிமையாளர் விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா, இடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, இந்த இடத்தை தானே வாங்கிக் கொள்வதாக தெரிவிக்க, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இடத்தை வாங்குவதற்காக முன்தொகையாக ரூ.50 லட்சத்தை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அதன் பின்னர் நிலத்தின் உரிமையாளர் அந்த இடத்தை எழுதித் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முத்தையாவும், அவரது உதவியாளரும் குடோனில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது 13 பேர் அடங்கிய கும்பல் குடோனுக்குள் நுழைந்தது. அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் முத்தையா வையும், அவரது உதவி யாளரையும் கட்டிப் போட்டனர். பின்னர், குடோனில் இருந்த இரும்புக்கம்பிகள், சிசிடிவி கேமராக்கள், 2 வாகனங்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.27 லட்சம். மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள், இருவரையும் மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தையா, சிங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் விசார ணையில், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த பிரபு என்ற காலனி பிரபு(36), திருப்பூரைச் சேர்ந்த கண்ணன்(30), மதுரையைச் சேர்ந்த அஜ்மத்அலி, வீரபாரதி(21), பென்னி (19), மனோஜ்குமார் (19), வீரய்யா(27), பிரபு(24), சங்கர்(24), பாலமுருகன்(26), முகேஷ்(22), பார்த்த சாரதி(19), 16 வயது இளைஞர் ஆகிய 13 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 13 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT