க்ரைம்

மாணவர்களை பணிவிடை செய்யச் சொன்னதாக புகார் - மேட்டூர் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

மேட்டூர்: மேட்டூர் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியரை பணிவிடை செய்ய வலியுறுத்தியதாக எழுந்த புகாரில், போக்சோவில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் வட்டாரத்தில் கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, மேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில மாணவ, மாணவியரை அழைத்து பணிவிடை செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெற்றோரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அன்று இரவு போக்சோ வழக்கில் ராஜாவை மேட்டூர் போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT