கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி பகுதியில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ரபீக் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுண்டம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கருணாகரன் (28) மற்றும் நிர்வாகி சக்திவேல் (25), ஆகியோர் பேக்கரி கடைக்குச் சென்றனர்.
அப்போது, குளம், ஏரிகள் தூர்வார வேண்டி உள்ளதால், ரூ.5 ஆயிரம் நிதி அளிக்குமாறு ரபீக்கிடம் கேட்டனர். இதற்கு மறுத்த அவர் ரூ.500 மட்டுமே நிதி வழங்குவதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், சக்திவேல், கடையில் தின்டபண்டங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 7 பாட்டில்களை எடுத்து உடைத்தனர்.
இதுதொடர்பாக, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ரபீக் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் 2 பேரையும் கைது செய்தனர்.