க்ரைம்

பொள்ளாச்சி அருகே கல்குவாரியில் பாறை விழுந்து இளைஞர் உயிரிழப்பு: விசாரணை நடத்த கனிம வளத்துறை முடிவு

எஸ்.கோபு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கல்குவாரியில் வேலை செய்தபோது பாறைகற்கள் தலையில் விழுந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிங்கா நல்லூர் போயர் காலனியை சேர்ந்த சண்முகம் மகன் சூர்யா (21). இவர் டி.நல்லிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள கல் குவாரியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 4-ம் தேதி குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மேலே இருந்து சரிந்து வந்த பாறைகளில் ஒன்று சூர்யாவின் தலையில் விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேச மூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இது குறித்து தமிழ்நாடு சுரங்க சான்றிதழ் பெற்ற தொழிலாளர் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான குவாரிகளில் கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலன் குறித்த கனிம வளத்துறையின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

கனிம வளச் சட்டப்படி குவாரியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தலைக்கவசம், ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்க வேண்டும். ஆனால் யாரும் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை. குவாரியின் உள் அமைப்பு படிக்கட்டுகள் போல அடுக்கடுக்காக இருக்க வேண்டும். பெரும்பாலான குவாரிகள் கிணறு போன்று வட்ட அமைப்பில் உள்ளன.

இதனால் மேலே இயந்திரங்களை பயன்படுத்தி வேலை செய்யும் போது பாறை கற்கள் சரிந்து விழும்போது, குவாரியின் உள்ளே வேலை செய்பவர்கள் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. டி.நல்லிக்கவுண்டன் பாளையம் குவாரியில் நடந்த விபத்திலும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் தரவில்லை என தெரியவருகிறது.

அத்துடன் ஒவ்வொரு குவாரிகளிலும் சுரங்க மேலாளர், போர்மேன், சுரங்க பணி மேற்பார்வையாளர் மற்றும் வெடி வைப்பவர் ஆகியோர் பணியமர்த்தப்பட வேண்டும். இதனால் வரும் முன் காப்போம் என்னும் அடிப்படையில் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். குவாரியில் நடந்த விபத்து குறித்து கனிம வளத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கனிம வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குவாரியில் பணியாற்றுபவர்களின் விவரங்கள் கனிம வளத்துறையிடம் இருக்காது. குவாரி சம்பந்தமான ஆவணங்கள், குவாரியின் நடவடிக்கைகள் மட்டுமே கனிம வளத்துறையிடம் இருக்கும். கனிம வளச் சட்டப்படி குவாரியில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அதனை தொழிலாளர் நலத்துறையினர் கண்காணிக்க வேண்டும். குவாரியில் நடந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT