கோவை: கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மருதமலை முருகன் கோயில் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய 3 பெண்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ரவி (47), மனைவி பழனியம்மாள் (40), உறவினர்கள் வனிதா (37), நதியா (37) என்பதும், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.
காவல்துறையினர் கூறும்போது, ‘‘கைதான 4 பேரும் கோயில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். புதுடெல்லி, மும்பை, காஷ்மீர் என பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவும் சென்று வந்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை பெங்களூருவில் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது’’ என்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது: சூலூர் அருகேயுள்ள வாகராயம் பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (24), விக்னேஷ் (24) ஆகியோர் கடந்த 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கார்த்திக்கை அரிவாளால் வெட்டிவிட்டு வாகனத்தை பறித்து சென்றதாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரித்திக் குமார்(19), விஜய் (20), சாந்த பிரியன் (21) ஆகியோரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். செல்போன் பறிப்பு சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததது. 2 இருசக்கர வாகனங்கள், ஒரு செல்போன், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன.