க்ரைம்

தருமபுரி | சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனை - துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனைக்கு துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை ஊராட்சியில் வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதியில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்தக் கடைகளால் வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். அங்கிருந்த 2 கடைகளில் ஒரு கடை மட்டும் நல்லம்பள்ளி அருகிலுள்ள டாடா நகர் பகுதிக்கு ஒரு மாதம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில்(எண் : 2821) பணியாற்றுவோர், மது வாங்க வருவோரிடம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், கள்ளச் சந்தைகளில் மதுபானம் விற்பனை செய்வோருக்கு மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு வந்த புகாரிபேரில் சந்துக் கடை ஒன்றில் மதுபானம் விற்ற நபரை அதியமான்கோட்டை போலீஸார் கைது செய்தனர். அவர் கைதான 1 மணி நேரத்தில் மீண்டும் அதே இடத்தில் அவரது மனைவி மற்றும் தயார் இருவரும் மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக ஆட்சியருக்கு புகார் வந்தது. இவர்களுக்கு மதுபானம் வழங்குவது வடக்குத் தெரு கொட்டாவூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் பணியாளர்கள் என்பதும் ஆட்சியர் கவனத்துக்கு தெரிய வந்தது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புகார்கள் அனைத்தும் உண்மை என உறுதியானது.

எனவே, அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்த வடக்குத் தெரு கொட்டாவூர் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்கள் கோவிந்தன், முருகன், விற்பனையாளர்கள் சதாசிவம், சரவணன், ராமதாஸ், திருமால், தீர்த்தராமன் ஆகிய 7 பேரையும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தருமபுரி மாவட்ட டாஸ்மாக் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT